திருவாரூர் மதுபான கடைகளில் மாதந்தோறும் மாமுல் வசூலிக்கும் டாஸ்மாக் பெண் அலுவலர் மீது புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திருவாரூரில் டாஸ்மாக் கணக்கு உதவி மேலாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஒவ்வொரு கடைக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்க வேண்டும் என கணக்கு உதவி மேலாளர் அனைத்து டாஸ்மாக் மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதைப்பற்றி புகார் மனு டாஸ்மாக் முது நிலை மண்டல மேலாளர், மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர், ஆகியோருக்கு புகார் அளித்து 5 மாதம் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திருவாரூரில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 1000 ரூபாய் கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கணக்கு அலுவலருக்கு மாதந்தோறும் பணம் வசூலித்துக் கொடுக்கும் திருத்துறைப்பூண்டி தாலுகா ராஜா, முத்துப்பேட்டை ராஜசேகர், நன்னிலம் சுந்தரராஜன், கௌதம், வலங்கைமான் ராமு, நீடாமங்கலம் பாலு ,கொரடாச்சேரி சுப்பிரமணி ஆகியோரிடம் விசாரித்தாலே உண்மை நிலவரம் தெரியவரும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பணியாற்றும் 9,855 மேற்பார்வையாளர்களின் மொபைல் ஃபோன்களை ஆய்வு செய்தாலே இந்த புகார் குறித்த உண்மை தன்மை அம்பலமாகும்.
அதோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், பல மாவட்டங்களில் இவர் FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்கள் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்பதை அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தால் தெரியவரும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.
மேலும் உதவி மேலாளர் தனி வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாய் தருவதோடு, அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வுகளின் போது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர மேலாளருக்கு என்று தனியாக கணக்கு வழக்கு இல்லாமல் 10,000, 20,000 என்று இஷ்டத்துக்கு வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் மதுபான கடை ஊழியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அதனால் தற்போதைய தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். ஊழல் ஒழிப்பில் முதல் கவனம் செலுத்தி நேர்மையான அரசு நடத்தப் போவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெறும் இந்த அடாவடி மாமூல் வசூலை தடுத்து சம்பந்தப்பட்ட பெண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments