// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** மறைந்த தாயார் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்த குடும்பத்தினர்!

மறைந்த தாயார் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்த குடும்பத்தினர்!

குரும்பலூர், ஆலங்குடி மகாஜனம் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த 

மு. சுப்புசாமி நாயுடு அவர்களின் மனைவியும், மறைந்த சு. ஞானசேகரன் மற்றும் சு. ரவிசந்திரன், சு.நாகராஜ் ஆகியோரின் தாயாருமான திருமதி சு. ரெங்கநாயகி அவர்கள் இயற்கை எய்தினார்.அவரது மறைவால் குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், அவரது உடலைத் தானமாக வழங்க வேண்டும் என்ற உயரிய மனிதநேயச் சிந்தனையுடன் குடும்பத்தினர் முன்வந்தனர்.இதையடுத்து, திருமதி சு. ரெங்கநாயகி அவர்களின் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்விக்கு உதவும் வகையில்  திருச்சி கி ஆ பெ விசுவநாதம் மருத்துவ க் கல்லூரி உடற்கூறியில் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறியல் துறைத்தலைவர் மருத்துவர் ஆனந்தி முன்னிலையில் உடல் தானமாக வழங்கப்பட்டன.  

தங்களின் அன்புக்குரியவரின் மறைவிலும், பிறரின் நலனை முன்னிறுத்தி உடல்தானம் வழங்கிய குடும்பத்தினரின் தன்னலமற்ற செயல் சமூகத்தில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.திருமதி சு. ரெங்கநாயகி  உடலைத் தானமாக வழங்கிய குடும்பத்தினரின் மனிதநேயச் செயலைப் பாராட்டி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, உடற்கூறியல் துறைத்தலைவர் மருத்துவர் வீ.ஆனந்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அச்சான்றிதழில் திருமதி ரெங்கநாயகி  அவர்களது விலைமதிப்பற்ற உடலை தானமாக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக முழுமனதுடன் தர முன்வந்த அவரது  மகன் /மகள் / உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களின் உயர்ந்த உள்ளத்திற்கு  மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


 உடல்தானத்தைச்  செயல்படுத்துவதற்கு லயன்ஸ் கிளப் ஆஃப் பிரீமியர் தலைவர் மணி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும் , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார்   உடல் தானம் வழங்குவதற்கு  உறுதுணையாக இருந்தனர்.

மனித வாழ்க்கை என்பது பிறருக்கு உதவி செய்து வாழ்வதில் தான் முழுமை பெறுகிறது. நாம் வாழும் காலத்தில் பிறருக்கு உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை வழங்கி மகிழ்கிறோம். அதேபோல், நமது வாழ்க்கை நிறைவடைந்த பின்னரும் பிறருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதற்கு உடல் தானம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உடல் தானம் என்பது ஒருவர் இறந்த பின்னர் தனது உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவ ஆராய்ச்சிக்கும் வழங்குவதற்கு  விருப்பம் தெரிவித்து  அளிப்பதாகும். மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் மனித உடலின் அமைப்புகளை நேரடியாக அறிந்து கொள்வதற்கும், மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் தானமாக வழங்கப்படும் உடல்கள் பெரிதும் உதவுகின்றன.

மனித உடலின் உறுப்புகள், திசுக்கள் மற்றும் உடல் அமைப்புகள் குறித்த அறிவைப் பெறுவதற்கு புத்தகங்கள் மட்டுமின்றி நேரடி ஆய்வுகளும் அவசியமாகின்றன. மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உருவாகவும், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்கவும் உடல் தானம் வழிவகுக்கிறது.உடல் தானம் செய்ய விரும்புவோர்   அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில்  முறையான பதிவு செய்து கொள்ள வேண்டும். இறப்புக்குப் பின்னர் உடலைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள், மருத்துவத் தகுதிகள் மற்றும் சட்ட விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமாகும்.

மதம், இனம், மொழி, சாதி, பொருளாதார நிலை போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கும் மகத்தான செயலாக உடல் தானம் விளங்குகிறது. உடல் தானம் செய்பவர்களின் குடும்பத்தினரும் இந்த உயரிய கொடையின் மூலம் மருத்துவ உலகிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.“நாம் வாழும்போது பிறருக்கு உதவுவோம்; இறந்த பின்னரும் பிறருக்கு பயனுள்ளவர்களாக வாழ்வோம்.”

உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும். உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழி எடுப்பதன் மூலம் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், மனிதநேயச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாம் பங்களிக்க முடியும்.

Post a Comment

0 Comments